விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூபாய் 7 கோடி முறைகேடு
அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட்;
கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். இந்த நிலையில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்த உளுந்து உள்ளிட்ட தானியங்களை, விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்தது போல் கணக்கு காட்டியதும், அந்த வியாபாரியின் வங்கி கணக்கிற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. ரூ.7 கோடி பணபரிமாற்றம் அதுபோல் கடந்த 6 மாதத்தில் மட்டும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வங்கி கணக்கில் இருந்து, அந்த வியாபாரிக்கு சுமார் ரூ.7 கோடி வரை சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் வேளாண் விற்பனைக்குழு ஆணையர் பிரகாஷ் நேற்று விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன், மேற்பார்வையாளர்கள் மணிகண்டன், ஆனந்த் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ரூ.7 கோடி மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையின் முடிவில் தான் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த முழு விவரம் தெரியவரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது