பிறரை ஏமாற்றி ஆதார் கார்டுகளை வாங்கி வங்கி கணக்கு தொடக்கம்: ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய 7 பேர் கைது
கைது;
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஐந்துதலை வாய்க்கால் பகுதியில் நேற்று போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு கார்களில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்களில் ராஜஸ்தான் மற்றும் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இதில், திருவிடைமருதுார் அருகே திருலோகியைச் சேர்ந்த சிவா (35) என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். மேலும், மற்றவர்களை தனித்தனியாக விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்தனர். இதையடுத்து சிவா உள்ளிட்ட இரண்டு கார்களில் வந்த ஏழு பேரையும் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவா கோயம்புத்துாரில் டீக்கடை நடத்தி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் தனது கடைக்கு எதிரே பானிபூரி கடை வைத்து இருந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவர்களுடன் பானிபூரி மற்றும் டீ சாப்பிட வருவோரிடம், “வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்க, ஆதார் கார்டு கொடுத்தால் 5 ஆயிரம், 10 ஆயிரம் தருவோம்” என்று கூறி, அவர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு, சிம் கார்டு பெற்றுள்ளனர். மேலும் அந்த வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகள் மூலம் ஆன்லைன் மோசடி போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் விற்பனை செய்யும் இடைத்தரகர்களாகவும், சில நேரங்களில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு அதன் மூலம் வரும் பணத்தை எடுக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இதுவரை சுமார் 150 பேரின் ஆதார் கார்டுகளை ஏமாற்றி பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக திருவிடைமருதுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவா, அவரது நண்பரான சாரதி,21, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன்லால், 23, கஜேந்திரகுமார்,27, ராம்ஸ்வருப்பாகர்,23, மகேந்திரநாயக்,30, மற்றும் பெங்களூரை சேர்ந்த தினேஷ் 43, ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 7 மொபைல் போன்கள், 15 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 15 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.