கார் திருட்டு வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்;
தாராபுரம் டாக்டர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த 2016-ம் ஆண்டு இவரது காரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, காரை யோகேஸ்வரன், பாண்டி, ஆனந்த் மற்றும் ராமன் என்கின்ற சப்பாத்தி ராமன் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான வழக்கு தாராபுரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தருமபுரி அரூர் தென்னகரம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையொட்டி அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ராமரை நேற்று கைது செய்தனர்.