குடற்புழு மாத்திரை சாப்பிட்ட  7ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து பலி: 2 மாணவர்களுக்கு சிகிச்சை   அரசு நிவாரணம் வழங்கல்

துயரச் சம்பவம்;

Update: 2025-02-12 05:03 GMT
தஞ்சாவூர் மாவட்டம், சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன்  – பரிமளா தம்பதி. இவர்களின் மூன்றாவது மகள் கவிபாலா (12),. பள்ளத்துார் அரசு மேல்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும் (அல்பென்டசோல்) மாத்திரை  அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழுவினரால் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 12  மணியளவில் மாத்திரையை சாப்பிட்ட, மாணவி கவிபாலா மதியம் பள்ளியில் 2 மணியளவில் விளையாடிக்கொண்டிருந் போது, திடீரென  மயங்கி விழுந்த நிலையில் மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வடிந்துள்ளது. உடனடியாக ஆசிரியர் துரைசிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் கவிபாலாவை அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்த போது, மாணவி கவிபாலா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த மாணவியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாத்திரை சாப்பிட்ட, புக்கரம்பையை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சக்திவேல் மகள் தியா (15),. ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு சின்னப்பன் மகள் சகாயமேரி (16), இருவரும் மயக்கம் ஏற்பட்ட நிலையில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பேராவூரணி எம்.எல்.ஏ., நா.அசோக்குமார் பார்வையிட்டார். இதற்கிடையில், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், பட்டுக்கோட்டை சாலையில், அனைத்து மாணவர்களையும் பரிசோதனை செய்ய வேண்டும், மாத்திரை தான் காரணமா என விசாரித்து தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சியர் சுகுமாறன், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இறந்து போன மாணவியின் உறவினர்கள், ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தொடர்ந்து மாணவி குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் 2.5 சென்ட் நிலத்திற்கான பட்டாவை வழங்கினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரணத்தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை எம்எல்ஏ நா.அசோக்குமார் முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து தஞ்சையில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு, மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Similar News