திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 7ம் நாள் அண்ணாமலையார் கோவில் மகாதேரோட்டம் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாள் பஞ்சமூர்த்திகள் தேரோட்டத்தில் 3வதாக அண்ணாமலையார் மகாதேரோட்டம் மாடவீதியில் பவனிவந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.;
ஆரணி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் இரவில் பஞ்சமூர்த்திகள் மாடவீதிகளில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் 7ம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.10 மணிளவில் முதலாவதாக விநாயகர் தேர், 2வதாக வள்ளிதெய்வாணை சமேத சுப்பிரமணியர் தேர் புறப்பட்டது. இதில் விநாயகர் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வடம்பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து மாலை 3.45 மணியளவில் பெரியதேர் எனப்படும் மகா ரதத்தில் அண்ணாமலையார் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனிவந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், கோவில் இணை ஆணையர் பரணிதரன், மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், கோட்டாட்சியர் எஸ்.ராஜ்குமார், வட்டாட்சியர் சு.மோகனராமன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் அரசியல் பிரமுகர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து இரவு உண்ணாமலையம்மன் தேர் புறப்பாடு நடந்தது. இந்த தேரை பெண்களே வடம்பிடித்து இழுத்தனர். சண்டிகேஸ்வரர் தேர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 4 மணிக்கு கோவிலில் சமய சொற்பொழிவும், 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பரத நாட்டியமும் நடைபெற்றது என்பது குறிப்பித்தக்கது. இந்த மகாதோரோட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த தோரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் 14 கி.மீ. தூரமுள்ள கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநேர் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை ஆகிய சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டதோடு இடுக்கு பிள்ளையார் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்தனர். மகாதேதோட்டத்தையொட்டி கோவில் மற்றும் கிரிவல பாதையில் ஆங்காங்கே ஆசிரமங்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மகா தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.