. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சீரான இடைவெளியில் மிதமானது முதல் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9.30மணி முதல் 10.30 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், எலந்தங்குடி, வழுவூர், மங்கைநல்லூர், கோமல், சேத்தூர், வில்லியநல்லூர், செம்பனார்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்களும், இந்த மழை பருத்தி சாகுபடி மற்றும் குறுவை விவசாயத்திற்கு ஏற்றது என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 5 மணி நேரம் மயிலாடுதுறையில் பல்வேறு பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.