கோவை: சட்டவிரோத சேவல் சண்டை- 8 பேர் கைது !
சட்டவிரோத சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்யப்பட்டு, 26500 ரூபாய் பணம் மற்றும் 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை தொண்டாமுத்தூர் போலீசார், புள்ளாக்கவுண்டன்புதூர், இச்சுக்குழி மலை அடிவாரத்தில் நடந்த சட்டவிரோத சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.26,500 பணம் மற்றும் 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சேவல் சண்டை வளர்ப்பு பிரபலமாக இருந்தாலும், இது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு முழுவதும் இந்த பகுதியில் சேவல் சண்டை சம்பவங்கள் தொடர்பாக பல வழக்குகள் பதிவாகின்றன. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, காருண்யா நகர், பேரூர் போன்ற பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.