கோவை: ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் !

கோவை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கிடந்த பாலித்தீன் பையில் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல்.;

Update: 2025-04-01 03:50 GMT
கோவை ரயில் நிலையத்தில் சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் கண்டறிதல் பிரிவு, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் அரசு ரயில்வே காவல்துறையினர் இணைந்து நேற்று சிறப்பு சோதனை மேற்கொண்டனர். கோவை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில், தன்பாத் - ஆலப்புழா வந்து நின்றது. அப்போது ரயிலின் பின்புற பொதுப் பெட்டியின் கழிவறை அருகே சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பாலித்தீன் பை ஒன்று கிடந்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினர், மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர் மற்றும் அரசு ரயில்வே காவல்துறையினர் இணைந்து அந்தப் பையைச் சோதனையிட்டனர். பையைத் திறந்து பார்த்தபோது, சுமார் 8 கிலோ எடையுள்ள உலர்ந்த கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 4 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News