தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி தங்கம் வென்ற 82 வயது பாட்டி
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கம் வென்று 82 வயது பாட்டி சாதனை.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்துகவுண்டர் அவன்யுவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள். இவரது மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் வசித்து வருகின்றனர். ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள நிலையில்,வார இறுதி நாட்களில் பாட்டி கிட்டம்மாள் பல்லடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வரும்போது தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைபட்டுள்ளார். இரண்டு பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பேரன்களோடு உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளார். அங்கு தொடர்ச்சியாக பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பாட்டியின் ஆர்வத்தைக் கண்டு உடற்பயிற்சியாளர் சதீஷ், பாட்டியை கோவையில் நடந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த போட்டியில் பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். மேலும் "Strong man of South indian-2024" என்ற பட்டத்தையும் பெற்றார். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற முனைப்போடு தொடர் பயிற்சி மேற்கொண்ட பாட்டி கிட்டம்மாள் ஜனவரி 4 மற்றும் 5ஆம் தேதி புதுடில்லியில் "Natural strong powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்று முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 82 வயதிலும் மனம் தளராமல் திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பாட்டி கிட்டம்மாள் அவர்களுக்கு சமூக வலைதளங்களிலும், உடற்பயிற்சி கூடத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதை தனது ஆசை எனவும் சத்தான உணவுகளை உட்கொள்வதால் தான் இந்த சாதனை 82 வயதில் சாத்தியமானது எனவும் பாட்டி தெரிவித்துள்ளார்.