திருச்செந்தூர் கோவிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-ல் வைகாசி விசாகம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 9ஆம் தேதி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.;

Update: 2025-06-02 03:44 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மதியம் உச்சிகால பூஜைக்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தைச் சேர்ந்தார். மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து, சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தர்கள் கப்பல் பாடல்கள் பாட, மண்டபத்தை 11 முறை வலம் வந்தார் சுவாமி. பின்னர், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 10ஆம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. அதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்தைச் சேர்கிறார். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளித்தலும் நடைபெறும். பின்னர், மகா தீபாராதனையாகி சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தேவசேனா அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வழக்கமாக சித்திரை, வைகாசி வசந்த திருவிழா ராஜகோபுரம் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறும். நிகழாண்டு, அதனருகே பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்றுவருவதால், இத்திருவிழா சண்முகவிலாச மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Similar News