கோவை: காஷ்மீர் தாக்குதலுக்கு SDPI கண்டனம் !

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் கோவையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2025-04-24 02:46 GMT
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் கோவையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று இரவு அஞ்சலி செலுத்தப்பட்டது. உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய SDPI கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் முகமது இசாக், இந்த கொடிய தாக்குதலுக்கு கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர், இதுபோன்ற செயல்களை யார் செய்தாலும் தவறு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இந்தியாவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு மத அடையாளம் பூசப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். பயங்கரவாத செயல்களை யார் செய்தாலும், அவர்களின் மதம், இனம் அல்லது ஜாதி அடையாளங்களை குறிப்பிடாமல், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற பொதுவான பார்வையுடன் மக்கள் அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Similar News