திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 மூட்டை ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின் பேரில், ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் காவலா்கள் புதன்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பாலக்கரை காஜாப்பேட்டை கீழ கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதில், அங்கு தலா 45 கிலோ எடையுள்ள 24 முட்டைகளில் சுமாா் 1,080 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அரிசியை பதுக்கி வைத்திருந்தவா் த. தனலட்சுமி (40) என்பதும், அவா் அருகில் உள்ள குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து சிறிது சிறிதாக அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, இட்லி மாவு தயாரிக்கவும் மற்றும் மாட்டு தீவனங்கள் தயாரிக்கவும் அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.