10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாத சாலை பொதுமக்கள் அவதி
சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சாலை அமைக்கப்படாததால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ளது வாணியங்குடி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழவாணியங்குடி பகுதியில் மானாமதுரை சாலையில் இருந்து கீழவாணியங்குடி கீழ தெருவிற்கு செல்லக்கூடிய ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இங்கு 100க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த சாலை அரை கிலோ மீட்டர் துாரம் குண்டும் குழியுமாக இருப்பதால் மழை பெய்தால் சகதியமாக மாறிவிடுகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகவும் சிரமமப்படுகின்றனர். மழைக்காலங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது இந்த பகுதியில் புதிதாக ரோடு போட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். அவசரத்திற்கு இருசக்கர வாகனத்தில் கூட செல்லமுடியாது. இந்நிலை குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் சேதம் அடைந்துள்ள சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது