100 நாள் வேலை உறுதி திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி

கோட்டூர் ஊராட்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்;

Update: 2025-02-19 12:07 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில், 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, திருமுருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி மன்ற அலுவலக வாசலில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி தலைமையிலும், ஒன்றிய செயலாளர் லெனின், ஒன்றியக்குழு முருகவேல், விவசாய தொழிலாளர் சங்க கிளை செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலையில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், அன்பழகன் ஆகியோர், 100 நாள் வேலை உறுதி திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதின் பேரில், தர்ணா போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். அதேபோல் ஏர்வாடி, இடையாத்தங்குடி, வடகரை ஆகிய ஊராட்சிகளிலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News