100 நாள் வேலையளிப்பு திட்டத்தில் திருத்தம்: டிச.24-இல் ஒன்றிய தலைநகரங்களில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்.பி.தகவல்.
நாமக்கல், டிச. 20: மகாத்மா காந்தி நூறு நாள் வேலையளிப்பு திட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட ஒன்றிய தலைநகரங்களில் புதன்கிழமை(டிச.24) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.;
இது குறித்து மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர். என்.ராஜேஸ்குமார் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டம், நூறு நாள்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசே வழங்கி வந்தது. ஆனால் தற்போதைய மத்திய பாஜக அரசு திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, நூறு நாள் வேலையளிப்பு என்பதை 125 நாள்களாக உயர்த்துவதாக கூறினாலும், புதிய மசோதாவில் அறுவடை காலம், விதைப்பு காலம் என்று கணக்கிட்டு அந்த நாள்களில் வேலையில்லை என கூறப்படுகிறது. விஞ்ஞானபூர்வமாக கிராமப்புறதில் உள்ள ஏழை கூலி விவசாய தொழிலாளர்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது.விதைப்பு மற்றும் அறுவடை காலத்தை கணிக்கிட்டு, ஆண்டிற்கு 60 நாள்கள் வேலையில்லை என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் போதிய அளவிற்கு விவசாய பணிகள் நடைபெறுமா ? வறட்சி காலத்தில் விவசாய பணிகள் நடைபெறுமா ? அதில் அனைவருக்கும் போதிய அளவு வேலை கிடைக்குமா! என்பதை மத்திய அரசு சிந்திக்கவில்லை.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் படிப்படியாக வேலை நாள்களை குறைத்துள்ளனர். திட்டத்தில் இடம் பெற்றிருந்த மகாத்மா காந்தியின் பெயரையும் அவர்கள் நீக்கி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் மனித வேலை நாள்களாக இருந்தது, தற்போது 20 லட்சம் மனித வேலை நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை பாஜக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து உரிய காலத்தில் வழங்கவில்லை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி சுமார் ரூ.1900 கோடி நிலுவையில் இருக்கிறது.மத்திய அரசின் புதிய வேலையளிப்பு திட்ட மசோதாவில் நிதி 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத நிதிச் சுமை மாநில அரசின் மீது ஏற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக புதிய மசோதாவை ரத்து செய்வதுடன், மகாத்மா காந்தி நூறு நாள் வேலையளிப்பு திட்டத்தை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாதிரியே செயல்படுத்திட வேண்டும். இதனை வலியுறுத்தி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட ஒன்றிய தலைநகரங்களில் புதன்கிழமை(டிச.24) காலை 10 மணியளவில், அனைத்து வேலையளிப்புத் திட்ட தொழிலாளர்களை திரட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக திங்கள்கிழமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார். இந்த பேட்டியின்போது, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.என்கே-20-எம்.பி நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார்.