100 நாள் வேலை திட்டத்தில் 5 மாத சம்பள பாக்கியை வழங்காத மத்திய அரசை கண்டித்து

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பேரணி;

Update: 2025-04-01 07:41 GMT
மத்திய ஐக்கிய முன்னணி அரசு கடந்த 2005 -ல் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ், கிராம மக்கள் ஏராளமானவர்கள் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக, 100 நாள் வேலை திட்டத்திற்கான சுமார் ரூ.4000 கோடி நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் கீழையூர் கடைத் தெருவில் இருந்து, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு, கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பாஸ்கர் கோரிக்கையை விளக்கி பேசினார். 100 நாள் வேலை செய்து 5 மாதம் கடந்தும் ஊதியம் வழங்காத மத்திய அரசை கண்டித்தும், வேலை செய்த அனைவருக்கும் உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரியும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தின கூலி ரூ.700 வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஏ.ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம்.அலாவுதீன், சிபிஐ ஒன்றிய துணை செயலாளர் வி.எஸ்.மாசேதுங், சிபிஐ ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர், சிபிஐ ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.கண்ணையன், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் ஒன்றிய செயலாளர் எம்.பாப்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News