தீபாவளி : மதுரை மாநகரில் 1000 டன் குப்பைகள் அகற்றம்
Update: 2023-11-13 06:46 GMT
தீபாவளி நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நேரக்கட்டுப்பாட்டையும் மீறி நாள் முழுவதுமே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நேற்று தீபாவளியையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என 1000 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. குப்பை மற்றும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 700 டன் குப்பைகள் சேரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி 300 டன் அதிகமாக பட்டாசு குப்பைகள் சேர்ந்து மொத்தமாக 1000டன் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை மேற்கொள்வதற்காக மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும், 5 சுகாதார அலுவலர்கள், 18 சுகாதார ஆய்வாளர்கள், 4,097 தூய்மைப்பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் மக்கும் மற்றும் மக்கா குப்பை சேகரிக்கும் லாரிகள், 57 குப்பை சேகரிக்கும் லாரிகள், 34 டிராக்டா்கள் மூலம் குப்பைகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இந்த குப்பைகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள வெள்ளக்கல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த நிலையில் குப்பைகளை அகற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கையுறைகள் அணியாமல் வெறும் கைகளில் பல இடங்களில் குப்பைகளை அகற்றினர். தொடர்ச்சியாக மாலை 3 மணி வரை குப்பைகள் அகற்றப்பட உள்ளது. மழை பெய்ததன் காரணமாக குப்பைகள் சேறும் சகதியுமாக ஈரத்தன்மையோடு இருந்ததால் தூய்மை பணியாளர்களை அதனை அகற்றுவதற்கு சிரமம் ஏற்பட்டது.