103 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1045 மகளிர்களுக்கு ரூ.40.9 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில்; தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 103 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1045 மகளிர்களுக்கு ரூ.40.9 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்; வழங்கினார். பின்னர் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: ஒரு காலத்தில் பெண்கள் ஒன்றாக சேர்ந்தால் பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற ஒரு தவறான கருத்து இருந்தது. தற்போது, இரண்டு பெண்கள் சேர்ந்து நான்கு கரங்களாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு மகளிர் சுய உதவிக்குழு. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று வினவிய காலம் மாறி, இன்று பெண்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்கான மாற்றத்தோடு, சமுதாயமாற்றத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றனர். இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் ஏறத்தாழ 45 சதவீத தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். உழைப்பிற்கு உருவத்தை கொடுத்து உருவாக்குகின்ற பொழுது, அந்த உருவம் பெண்ணாக இருந்தது, அது சக்தி படைத்ததாகவும் இருக்கிறது. அந்த சக்தியை உங்கள் முன்னேற்றத்திற்கும் உங்களுடைய சமுதாய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார்கள். நமது விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஏறத்தாழ பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களும், நகரப்பகுதிகளில் 3800 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களும் என மொத்தம் 13,800 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. மதி அங்காடி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலும், மின்னனு வணிகம் (E-Commerce) மூலமாகவும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது போன்று மகளிர் சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் மூலம் நிதிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. எனவே, பெண்கள் தங்களது சுய உழைப்பினால், தங்களது சுய பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து, உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். உங்களுடைய பொருளாதாரத்தையும் சமூக மதிப்பையும் உயர்த்தி, உயர்ந்த நிலையை அடைவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்; அவர்கள் தெரிவித்தார்.