தள்ளாத வயதிலும் வாக்களிக்க வந்த 104 வயது முதியவர்!
கோவையில் தள்ளாத வயதிலும் வாக்களிக்க வந்த 104 வயது முதியவர், ஜனநாயக கடமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கோவை:பதினெட்டாவது மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க காலை ஏழு மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் நின்று வாக்களித்து வருகின்றனர்.இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.வாக்கு சாவடிக்கு வர இயலாத முதியவர்களின் இல்லத்திற்கே சென்று தபால் வாக்கை பெற்றது.
இந்நிலையில் கோவை மக்களவை தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற 104 வயது முதியவர் ஒருவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்தார்.கோவை மாவட்டம் கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணபதி கவுண்டர் தனது 104 வது வயதில் மகள்,பேரன், கொள்ளு பேரன்களுடன் வந்து கோவை மக்களவைத் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார்.முன்னதாக வீட்டில் இருந்து காரில் வந்த கணபதி வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தது அங்கிருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முதியவர் கணபதி கூறுகையில் தான் 21 வயதில் இருந்து வாக்களித்து வருவதாகவும் இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்க தவறியது இல்லை என்றவர் வெளியூர் சென்றிருந்தாலும் வாக்குப்பதிவு அன்று வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். வாக்களிப்பது ஜனநாயக கடமையை என்றும் அதனை அனைவரும் நிறைவேற்ற வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.