108 ஆம்புலன்ஸ் பற்றாக்குறை சரி செய்ய கோரிக்கை
108 ஆம்புலன்ஸ் பற்றாக்குறையாய் சரி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.;
விருதுநகர் மாவட்டம் முழுவதும்உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. பிரசவங்கள், ரோடு விபத்து, தற்கொலை, பட்டாசு விபத்து போன்றவற்றில் பாதிக்கபட்டவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு வந்து உயிரை காப்பாற்ற மாவட்டத்தில் மொத்தம் 25 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இவையும் 6 முதல் 10 கி.மீ.,க்கு 1 என அந்தந்த பகுதிகளின் பரப்பளவிற்கும், விபத்துக்கள் நடைபெறுவதை பொருத்தும் இயக்கப்படுகிறது. இதனால் ஒரே பகுதியில் இரண்டு, மூன்று விபத்துக்கள் நிகழ்ந்தால் மற்ற இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டியுள்ளது.
விபத்தில் கை, கால் முறிவு என்றால் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் மாவட்டத்தின் தொலைவில் உள்ள பகுதிகளில் விபத்து நிகழ்ந்து பலத்த காயமடைந்து, ரத்த போக்கு அதிகரித்தால் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தான் அழைத்து வரப்படுகிறார்கள்.
இப்படி வரும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வந்தால் பாதிக்கப்பட்டவர் காப்பாற்றி விடலாம். எனவே அதிகமாக ரோடு, பட்டாசு விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளில் மக்களின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 25லிருந்து 30 ஆக உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.