திருபுவனம் அருகே 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த முற்பாண்டியர் கால சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-18 10:44 GMT

கண்டெடுக்கப்பட்ட சிலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கழுவன்குளத்தில் முற்றிலும் சிதைந்த நிலையில் வைஷ்ணவி சிற்பம் இருப்பதாக அருப்புக்கோட்டை கலைமகள் கல்லுாரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் கோபி தகவல் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான தாமரைக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளனர். அந்த சிற்பம் 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முற்பாண்டியர் கால பாணியில் அமைந்த சிற்பம் என்று கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வைஷ்ணவி சிற்பமானது மூன்றடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

தலைப்பகுதி கிரீடம் மகுடமும் காதுகளில் பத்திர குண்டலமும் நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் சுதர்சன சக்கரம் பிரயோக நிலையிலும், இடது மேற்கரத்தில் சங்கும், வலது முன் கரத்தை அர்த்த வர ஹஷ்தமாகவும், இடது முன் கரத்தை வரஹஸ்தமாகவும், ஒரு காலை மடக்கி மறு காலை தொங்கவிட்டும் சுகாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வைஷ்ணவி சிற்பத்தில் வலதுகரத்தில் அபயமுத்திரை காணப்படும் ஆனால் இந்த சிற்பத்தில் வலதுகரமானது.

அர்த்த வரகஸ்தம் காணப்படுவதும் இடது கரத்தில் வரகஸ்தம் காணப்படுவது வித்தியாசமானதாக உள்ளது. இந்த சிற்பம் காணப்படும் இடத்தில் ஒரு கற்றளி இருந்ததற்கான கட்டுமானங்கள் சிதைந்து காணப்படுகிறது. இங்கு பிற்பாண்டியர்கால முருகன் சிற்பமும், துவாரபாலகர் சிற்பமும் காணப்படுகிறது. மேலும் இங்கு சிவன் கோவிலுக்கான ஆவடைகள் லிங்கம் இல்லாமல் சிதைந்து காணப்படுகிறது. கற்றளிக்கான அடித்தளம் காணப்படும் இடத்தில் கருவேல முட்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

ஆயினும் தொடர்ந்து இச்சிற்பத்திற்கு வழிபாடு நடந்து வருகிறது. இவ்விடத்தை அரசு முறையான ஆய்விற்கு உட்படுத்தினால் நம் முன்னோர்களின் சிவ வழிபாடு வெளிவர வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

Similar News