11 வழித்தடங்களில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை : மேயர் தகவல்!

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.;

Update: 2025-08-14 08:08 GMT
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசுகையில், "தூத்துக்குடியில் தசரா முடிந்தவுடன் மழைக்காலம் தொடங்கி விடும் இதை கருத்தில் கொண்டு கடற்கரையில் இருந்து பக்கிள் ஓடையில் 6 கிலோ மீட்டர் தூரம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மழை காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. கோக்கூர் குளம் பராமரிக்கப்பட்டு மழைநீர் தேங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நகரில் தேங்கும் மழைநீர் 11 வழித்தடங்களில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மாநகராட்சி க்கான மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்கிள் ஓடையில் டன் கணக்கில் கேரி பேக் கிடக்கிறது. இதற்கு பொதுமக்கள் தான் முடிவு கட்ட வேண்டும் என்றார். இதில், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சந்திரபோஸ், விஜயலட்சுமி, பொன்னப்பன், ஜான்(எ) சீனிவாசன், ராமர், கந்தசாமிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News