வேப்பந்தட்டை, குன்னத்தில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேப்பந்தட்டை மற்றும் குன்னம் வட்டத்தில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ள தகவலில், பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2024 ஜனவரி மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 16 மி.மீ., பெய்த மழையளவு 29.18 மி.மீ, ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 89,767 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் . சிறுதானியங்களில் பயறு வகைகளில் எண்ணெய் வித்து பயிர்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது.
வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக்கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் படிபடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளின் நீண்ட நாட்களாக தங்களது பகுதிக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர கோரியிருந்தனர். அதனை நிறைவேற்றும் வகையில் குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பிப்ரவரி மாதம் திறக்கப்படவுள்ளது. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு ஆய்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்துள்ளார்.