12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடன் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடன் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 அரசு பள்ளிகள் 67 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகளில் என மொத்தம் 251 பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடன் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். தற்போது கல்வியாண்டின் முக்கியமான தேர்வு கால கட்டத்தை நோக்கி இருக்கிறோம். எந்த ஒரு போட்டியிலும் இறுதிச்சுற்று என்பது மிக முக்கியம். அதில்தான் சோர்வு, களைப்பு போன்றவை ஏற்படும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் யார் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்கிறார்களோ அவர்களே வெற்றியடைகிறார்கள். தற்போது எவ்வளவு நேரம் படிக்கிறீர்களோ அதைவிட ஒரு நாளைக்கு சிறிது கூடுதலாக முயற்சி செய்தால், பெறக்கூடிய மதிப்பெண்களும், அதனால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் மிகப்பெரிய அளவில் இருக்கும். உங்களுடைய உழைப்பும், கவனமும் தேர்வை நோக்கி இருக்க வேண்டும். அதற்காக எந்தவொரு மனஅழுத்தமும் இல்லாமல், நமக்கான முயற்சிகளை முழுமையாக செய்ய வேண்டும். அதற்கான முடிவுகளுக்கு ஒரு போது கவலைப்படக் கூடாது. நமக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து முன்னேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டு, வாய்ப்புகளுக்காக உழைக்க வேண்டும். தேர்வு முடிந்து உயர்கல்வியில் என்ன படிப்பு, எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதன் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்விக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் தங்கள் இலக்கு குறித்து பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி தலைசிறந்த கல்லூரிக்கு சென்று உயர்கல்வி பயில வேண்டும். உயர்கல்வியில் விருப்பமான துறையை தேர்வு செய்வதற்கு தேவையான கட்ஆப் மதிபெண்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் முயற்சி செய்ய வேண்டும். தேர்வுகளுக்கு இடையில் கிடைக்கக்கூடிய விடுமுறை தினங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிதளவு மதிப்பெண் வித்தியாசத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை தவறவிட்டவர்கள் உள்ளனர். அதனை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சிறிதளவு யோசித்தால், நாம் பெரிய வாய்ப்புகளை தவறவிட மாட்டோம். இந்த காலகட்டத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு கூடுதலாக முயற்சி செய்து, இலகுவான மனதோடு செயலாற்றி, அடுத்து வரும் உயர்கல்விக்கு திட்டமிட வேண்டும். உயர்கல்வி சேருவதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்க பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். பொதுத்தேர்வில் உங்களால் முடிந்த சிறப்பான பங்களிப்பை அளித்து, எந்தவொரு தேர்வு முடிவு வந்தாலும், அதை வைத்து வாழ்க்கையில் சிறப்பாக செயலாற்ற முடியும். எனவே மாணவர்கள் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.