காஞ்சிபுரத்தில் 2 ஆண்டுகளில் 125 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்
காஞ்சிபுரத்தில் 2 ஆண்டுகளில் 125 சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 125 சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 15 ஆயிரத்து 341 பேர் பயன் பெற்றுள்ளனர் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தனியார் நிறுவன வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தொழிற்சாலை நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. இது மட்டுமில்ல அது பல்வேறு இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகளில் பல லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு , பயிற்சித்துறை சார்பில் மாதந்தோறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி தனியார் பாலிடெக்னிக் வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு இணை இயக்குனர் அருணகிரி தலைமையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 125 சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 15 ஆயிரத்து 341 பேர் பயன் பெற்று தற்போது பணிபுரிந்து வருவதாகவும், இங்கு இன்று நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 110 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 17,000 காலி பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப அறிவிப்பு பலகையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்றவாறு தங்கள் சுய விவர விண்ணப்பங்களை அந்த நிறுவனங்களிடம் சமர்ப்பித்து நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் சுய விவர குறிப்புகளை பதிவு செய்து அந்தந்த நிறுவனங்களில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் இரண்டு மணி நேரத்தில் நடைபெற்ற நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்டோர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் திருமலை பொறியியல் கல்லூரி முதல்வர் மோகன்ராஜ் , தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.