வனவிலங்குகளுக்கு 15 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி
பேரணாம்பட்டு வனச்சரகத்தில் உள்ள காப்பு காடுகளில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்தில் உள்ள காப்புகளில் உள்ள 15 மான் குட்டைகளில் வன விலங்குகளுக்கு தண்ணீர நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. பேரணாம்பட்டு வனச்சரக காப்புக்காடுகளில் இருந்து மான்கள் தண்ணீர்,
இரை தேடி கிராமப்பகுதிகளுக்கு வருகின்றன. அப்போது நாய்களால் துரத்தப்பட்டு காயமடைவது, விபத்தில் சிக்கி உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனை தவிர்க்க பேரணாம்பட்டு வனச்சரகத்தில் உள்ள மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா உத்தரவின் பேரில்,
பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் மேற்பார்வையில், வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2ஆவது கட்டமாக பல்லலகுப்பம், மோர்தானா, சேராங்கல் ஆகிய காப்புக்காடு பகுதிகளில் 15 இடங்களில் உள்ள குட்டைகள், தொட்டிகளில் டிராக்டர்கள் மற்றும் அருகிலுள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது.
பேரணாம்பட்டு வனவர்கள் அண்ணாமலை, இளையராஜா, மாதேஸ்வரன் முரளி, வனக்காப்பாளர்கள் ரவி, வெங்கடேசன், அரவிந்தன், திருமலைவாசன், புருஷோத்தமன் ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.