ரூ.1.50 கோடி செலவில் புதிய சந்தை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சந்தைப்பேட்டையில் ரூ.1.50 கோடி செலவில் புதிய சந்தை கட்டட திறப்பு விழா நடந்தது.
காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 6.74 ஏக்கர் பரப்பளவில் வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 90 கடைகளுடன் கூடிய புதிய சந்தை கட்டடம் கட்டும் பணி 2022ம் ஆண்டு தொடங்கியது.2 ஆண்டுகளாக நடந்த சந்தை கட்டட பணி முடிவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இச்சந்தையில் வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாடின்றி வீணாகி கிடக்கிறது. செப்டிக் டேங்க் மூடப்படாமல் கிடப்பதால் அபாயம் நிலவுகிறது. கழிப்பிட வசதி இல்லாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் கழிப்பிட வசதி செய்து தரப்படும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கழிப்பிட வசதி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. பழைய கழிப்பிடமும் பராமரிக்கப்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட சந்தை கட்டடம், செயல்பாட்டிற்கு வரும் முன்பே ஆங்காங்கே குழி விழுந்தும், உடைந்தும் சேதமடைந்து கிடக்கிறது. தவிர அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபெற்ற நிகழ்ச்சியில் புதிய கட்டடத்தை சுற்றிலும் குப்பை கழிவு மற்றும் இடிபாடு மணல் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசியது.