திருப்பூரில் பேக்கரியில் 156 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்!
திருப்பூரில் பேக்கரியில் 156 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை!
Update: 2024-06-21 05:06 GMT
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ரவி மற்றும் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள பேக்கரிகளில் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் வணிகம் செய்த பேக்கரிக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பை மற்றும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா போன்றவற்றை பயன்படுத்திய பேக்கரிக்கு இரண்டாம் முறை குற்றத்திற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தயாரிப்பு தேதி குறிப்பிடாத லேபிள் விதிகள் குறிப்பிடாமல் வைத்திருந்த 2 கிலோ பிரட், 10 லிட்டர் குளிர்பானங்கள், 3 கிலோ அளவிலான திண்பண்டங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், 2 பேக்கரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், கலப்பட டீத்தூள் 156 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. உணவின் தரம் சார்ந்த புகார்களை 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.