செஞ்சி அருகே 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-05 14:30 GMT

 செஞ்சி அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செஞ்சியில் இருந்து சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது ஜெயங்கொண்டான் கிராமம். செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணா்வு மன்றத் தலைவா் லெனின் மற்றும் செயற்குழு உறுப்பினா் சா.வடிவேல், ராஜாதேசிங்கு அரசுப் பள்ளி ஆசிரியா் தே.பாலமுருகன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆா்வலருமான நா.முனுசாமி ஆகியோரைக் கொண்ட குழு ஜெயங்கொண்டான் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது நடு கல் ஒன்றை கண்டெடுத்தனா். இந்த நடுகல் சுமாா் 15- 16 ஆம் நூற்றாண்டை சாா்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சுமாா் ஒரு மீட்டா் உயரமும், 50 செ.மீ. அகலமும் கொண்ட கருங்கல்லில் நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.

நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு குதிரையின் மீது ஒரு வீரன் வலது கையில் போா்வாளை மேலே தூக்கிப்பிடித்த வாரும் இடது கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும் நம்மை பாா்ப்பது போல் அமா்ந்துள்ளாா். அவருக்கு பின்னால் அவருடைய துணைவியாா் குதிரையின் மீது நம்மை பாா்த்தவாறு அமா்ந்துள்ளாா். அவருடைய தலையில் இருந்து பின்னப்பட்ட சடை காற்றில் பறந்தவாறு காட்டப்பட்டுள்ளது. குதிரை முன்னங்கால்களை தூக்கி ஓடுவது போல் வடிக்கப்பட்டுள்ளது. குதிரையின் வாலின் பின்பகுதியை தூக்கியவாறு காட்டப்பட்டுள்ளது. இவற்றை பாா்க்கும் போது குதிரை வேகமாக ஓடுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. குதிரையில் அமா்ந்துள்ள வீரன் மற்றும் அவரது துணைவி தலையிலும், காதுகளிலும் அணிகலன் அணிந்தும் காலில் வீரக் கழல் அணிந்தும் உள்ளது போல் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் போரில் வீர மரணமடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். தற்போது இந்த நடுகல் ஜெயங்கொண்டான் கிராமத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ளது. விளை நிலத்தில் இந்த நடுகல் இருந்திருக்கலாம் எனவும் விவசாயத்துக்குத் தடையாக இருந்த இந்த நடுகல்லை எடுத்து வந்து பின்னா் கோயிலில் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News