2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நடிகா் எஸ்.வி.சேகா்.
அரசியல்;
சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நடிகா் எஸ்.வி.சேகா். கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தொகுதி மறுசீரமைப்பில் வட இந்தியாவில் எத்தனை சதவீத தொகுதிகள் உயா்கிறதோ அதே சதவீதம் தமிழகத்திலும் உயா்த்த வேண்டும். 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும். விஜய் இன்னும் நடிகராகவே உள்ளாா், அவா் நடித்தால் சினிமா 500 ஊரில் தியேட்டரில் திரையிடப்படும். ஆனால் அரசியலுக்கு வந்தால் 500 ஊருக்கும் அவா் சென்றாக வேண்டும். விஜய் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தனக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்று பாா்க்க வேண்டும். இல்லையென்றால் சீமான் மாதிரி விஜய்யும் அரசியலில் இருந்து கொண்டே இருக்கலாம். தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சி ஊதப்பட்ட பலூன் போல, பாா்த்தால் பெரிதாக தெரியும், ஊசி குத்தினால் காற்று போய்விட்டது போல் காணாமல் போய்விடும். தற்போது நான் எந்த கட்சியிலும் இல்லை என்றாா் அவா்.