21 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் நடத்திக்கொள்ள மாவட்ட காவல்துறை அனுமதி
தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு, பொதுமக்களுக்கு இடையூறு அளிக்க கூடாது, ஊர்வலமாக செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட 21 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தெரிவித்துள்ளார்.;
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு, பொதுமக்களுக்கு இடையூறு அளிக்க கூடாது, ஊர்வலமாக செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட 21 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், அதன் தலைவர் விஜய் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூர் நகரில் காமராஜர் விளைவு பகுதியில் வருகின்ற 13ஆம் தேதி பிரச்சாரம் செய்வதற்கு கட்சியின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பரிசீலனை செய்து பிறகு அறிவிக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்து இருந்த நிலையில், இன்று தமிழக வெற்றி கழகத்தின் மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அரவிந்தன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இன்றியும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் நடத்திக் கொள்ளலாம் என்றும் பெரம்பலூர் நகரில் காமராஜர் வளைவு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த பகுதியில் அனுமதி மறுத்த காவல் துறை துறையூர் சாலையில் மேற்கு வானொலித் திடல் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது, பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது, காவல்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்ற பிறகு தான் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்க வேண்டும், கட்சியின் தலைவர் விஜய்யுடன் வரும் வாகனங்களுக்கு முறையான அனுமதி பெற வேண்டும், அவருடன் யார் யார் வருகிறார்கள் என்பது குறித்து காவல்துறைக்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் நடத்திக்கொள்ள மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.அனுமதி ஆணையை மாவட்ட காவலத்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா த வெ க மாவட்ட செயலாளர் சிவகுமாரிடம் வழங்கினார். இது தொடர்பாக மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த கூடாது, அனுமதி வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும், ஊர்வலமாக செல்லக்கூடாது, பிரச்சாரத்திற்கு வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடத்தை தவிர வேறு எங்கும் வாகனத்தை நிறுத்தக்கூடாது, பிரச்சாரத்தின்போது வாகனங்கள் அனுமதிக்கப் பட்டுள்ள வழித்தடத்தை மாற்றி செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட 21 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகழ்விற்கு 3000 பேர் வருவார்கள் என த வெ க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் கூடுதலாக வருவார்கள் என எதிர்பார்ப்பதால் தேவையான அளவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.