2484 பயனாளிகளுக்கு ரூபாய் 7.13 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 2484 பயனாளிகளுக்கு ரூபாய் 7.13 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-12-07 16:28 GMT
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் மற்றும் மாண்புமிகு மேயர் து.கலாநிதி முன்னிலையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டம், தாயுமானவர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 2484 பயனாளிகளுக்கு 7.13 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் அடையாளமாக 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் சமமாக வாழுகின்ற சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பது தான் நம்முடைய இலட்சியம்! ஆட்சிப் பொறுப்பு என்பது, நம்முடைய இலட்சியங்களை திட்டங்கள் மூலமாக வென்றெடுப்பதற்கான வழி! அதனால்தான், தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களையும் முன்னேற்றிக் கொண்டு வருகிறார். வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதுடன், மேலெழுந்து வருவதற்கு துணை நிற்கிறோம்! அந்த வகையில், இன்றைய நாள், சிறப்புமிக்க நாளாக அமைந்திருக்கிறது! தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்ட சட்டம், 2024-ஐ நிறைவேற்றி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சட்டப்பூர்வ உறுதியை உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திட்டத்தால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வளர்ச்சி திட்டங்களுக்காக, நிதிகள் விகிதாச்சாரப்படி கட்டாயம் ஒதுக்கப்பட்டு, சரியாக பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது. 2021 முதல் 2025 வரைக்கும் ஆதிதிராவிடர் துணை திட்டத்திற்கு 87 ஆயிரத்து 664 கோடி ரூபாயும், பழங்குடியினர் துணை திட்டத்திற்கு 8 ஆயிரத்து 78 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை. அதனால்தான், பல்வேறு திட்டங்கள் மூலமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில், உட்கட்டமைப்பு வசதிகள், தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மட்டுமல்ல, ஐ.ஐ.டி - என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில், கடந்த 2024-25 கல்வியாண்டில், 16 மாணவர்கள் மட்டுமே சேர்ந்த நிலை மாறி, இந்த 2025-26 கல்வியாண்டில், 135 மாணவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! எந்தளவுக்கு மாணவர்கள் மீது அக்கறை எடுத்து மேம்படுத்துகிறோம் என்பதற்கு, சமூகநீதி விடுதியே அதற்கு சாட்சி! அடுத்து, ‘அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்!’ உலகளவில் இருக்கின்ற டாப் யூனிவர்சிட்டியில் நம்முடைய பிள்ளைகள் படிக்க, அவர்களின் குடும்ப வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாகவும், உதவித்தொகையை 36 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி உள்ளார்கள். அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 385 மாணவர்கள் - ஆக்ஸ்ஃபோர்ட் - எடின்பரோ உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! அடுத்த முக்கியமான திட்டம், தொல்குடி புத்தாய்வு திட்டம்! பழங்குடியினர் தொடர்பான பாடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்க, நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட திட்டம். இந்தத் திட்டத்தில், தமிழ்நாட்டு பழங்குடியினர் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களுக்கும், முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு அறிஞர்களுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் என்று மூன்று ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத் திட்டங்களையும் சிறப்பாகசெயல்படுத்திவருகிறார் இதுபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கான திறன் பயிற்சி வழங்கவும், வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், “தொல்குடி தொடுவானம்” திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுகின்ற “நன்னிலம் மகளிர் நில உரிமை திட்டம்”, ஆதி கலைக்கோல் கலை இலக்கிய சங்கமம், “அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்”, தொல்குடி வேளாண் மேலாண்மைத் திட்டம், விரிவான தூய்மைப் பணியாளர்கள் நலத் திட்டம், வேறு தொழிலுக்கு மாற விரும்புபவர்களுக்கு மானியம், வீடில்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 2 ஆயிரம் வீடுகள் என்று பல நலத்திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. சமூக நல்லிணக்கத் திட்டத்தில், சாதிப் பாகுபாடற்ற மயானங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிராமங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசும் - சாதிப் பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு 'சமூக நல்லிணக்க ஊராட்சி' விருதும் - ஒரு கோடி ரூபாய் வளர்ச்சி நிதியும் வழங்கி இருக்கிறோம்! ஆண்டாண்டு காலமாக சமூகம் உருக்கியிருக்கின்ற அத்தனை தடைகளையும் உடைத்து நாம் முன்னேறி வர வேண்டும்! நாம் அடுத்து எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் நம்முடைய முன்னேற்றத்திற்கான பயணத்தில் மைல் கல்களை கடக்க வேண்டும்! அதுதான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உறுதிமொழியாக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமயிலான அரசு என்றும் துணையாக இருக்கும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தமிழ்நாடு தொழில் வணிக துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 1 நபருக்கு 5.86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானிய உதவிகளையும், தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டம் சார்பில் 23 பயனாளிகளுக்கு 78.71 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் தாயுமானவர் திட்டம், நலிவு நிலை குறைப்பு கடனுதவி, சமுதாய முதலீட்டு நிதி, வங்கி பெருங்கடன், வட்டார வணிக மைய கடனுதவி ஆகிய திட்டங்களின் கீழ் மொத்தம் 1672 நபர்களுக்கு 2.83 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும், தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 52 நபர்களுக்கு தையல் இயந்திரங்கள், 6 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா என 58 நபர்களுக்கு 4.08 இலட்சம் ரூபாய்கான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை மற்றும் பொறியியல் துறையின் கீழ் 3 நபர்களுக்கு 1.90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களையும், தொழிலாளர் நலத்துறையின் கீழ் 100 நபர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண நிதியுதவி, மானியம், என 10.81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் கீழ் 2 நபர்களுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 416 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார். இன்றைய விழாவில் கூடுதல் மொத்தமாக 2484 பயனாளிகளுக்கு 7.13 கோடி ரூபாய் அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திக்ஷ கு.செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார், பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் ப.ராமசாமி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News