ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

சிவகங்கை மாவட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மொத்தம் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்

Update: 2024-07-30 05:37 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாணியங்காடு மற்றும் வடமாவளி ஊராட்சி பகுதிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்குகளை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார் அந்தவகையில், குறிப்பாக கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அத்திட்டங்களின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் தமிழக முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகிறது. கிராமங்கள் நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வரும் சிவகங்கை மாவட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் தேவைகளை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த கிராமங்களின் அடிப்படை வசதி மற்றும் தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அதன்படி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளையும் அனைத்து ஊராட்சிகளிலும் மேம்படுத்துவது எனது தலையாய கடமையாகும். அதன்படி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாணியங்காடு ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-2023 ன் கீழ் ரூ.08.50 இலட்சம் மதிப்பீட்டிலும், வடமாவளி ஊராட்சிக்குட்பட்ட M.புதூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-2023 ன் கீழ் ரூ.08.50 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் அண்ணா நகர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024 ன் கீழ் ரூ.09.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கபப்ட்ட 03 கலையரங்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இவ்வூராட்சியில் சமுதாயக் கூடம், அங்கன்வாடி கட்டிட சீரமைப்பு உள்ளிட்ட கூடுதல் தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, தற்போது ஊராட்சியின் சார்பில் கோரிக்கைகள் வரபெற்றுள்ளன. அப்பணிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே அத்திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படையானதாகும். எனவே, தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான உரிய வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

Similar News