சங்ககிரியில் 29 அடி சாலையை காணவில்லை
சங்ககிரியில் 29 அடி சாலையை காணவில்லை என மக்கள் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரி ஒன்றியம் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆசிரியர் காலனியில் பஞ்சாயத்து சாலை அமைப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் சாரதாபழனியப்பன் அங்கு சென்ற போது அப்பகுதி பொதுமக்கள் 29 அடி அகலம் கொண்ட பஞ்சாயத்து சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் 8 அடி அகலம் மட்டுமே உள்ளது எனவும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பஞ்சாயத்து சாலை அமைக்க வேண்டும் எனவும் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர் அப்படியே தான் சாலை அமைப்போம் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வழிதடத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பஞ்சாயத்து சாலை அமைக்க வேண்டும் எனவும், சினிமா பாணியில் கிணற்றை காணோம் என்று வடிவேல் கூறுவதைப் போல வழிதடத்தை காணோம் என்று சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர். இதனால் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.