டாஸ்மாக் மது பான கடைகளில் கொள்ளையடித்த 3 பேர் கைது !

காஞ்சிபுரம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-15 10:46 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் சாலவாக்கம் கிராமத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த 29 ஆம் தேதி இரவு மதுபான கடையில் பின் சுவரில் துளையிட்டு சுமார் ரூ. 8.6 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை கடத்திச் சென்றதாக விற்பனையாளர் தேவராஜ் சாலவாக்கம் காவல் துறையில் புகார் அளித்தார்.சம்பவ இடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு, சாலவாக்கம் ஆய்வாளர் பிரபாகர் மற்றும் செந்தில்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. கடந்த இரு ஆண்டுகளாகவே அரசு மதுபான கடைகளின் சுவரினை துளையிட்டு மது பாட்டில்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் அதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் கும்பல் இதை மேற்கொண்டு இருக்கலாம் என அறிந்து சிசிடிவி காட்சிகளை பல்வேறு பகுதியில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சாலவாக்கம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. காஞ்சிபுரம் அடுத்த பெருநகர் பகுதியில் நின்று கொண்டிருந்த மினி வேனை கடத்தி இந்த கடத்தலுக்கு தேவையான பொருட்களுடன் சென்று மதுபான கடையில் இரவு நேரங்களில் கொள்ளையடித்து தப்பி செல்வது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சுபாஷ் மற்றும் விக்னேஷ், செங்கல்பட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் , மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும்சிறையில் அடைத்தனர். மேலும் இந்த குற்ற செயலுக்கு மூளையாக செயல்பட்ட மோகன் குமார் என்பவர் புதுப்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்பதும் பரோலில் வெளிவந்த நிலையில் தலைமறைவாகி பல்வேறு கிராமங்களில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. மேலும் இவருக்கு உறுதுணையாக இருக்கும் கார்த்திக்கு என்ற நபரையும் சாலவாக்கம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பிடிபட்ட குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு வாக்கிடாக்கிகள் நவீன துளையிடும் இயந்திரம் மற்றும் திருட்டு உபகரண பொருட்கள் என இவை அனைத்தையும் பார்க்கும் போது ஹைடெக் திருட்டு கும்பல் என தெரியவந்துள்ளது. நீண்ட காலமாக அரசு மதுபான கடைகளில் கொள்ளையடிக்கும் கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பலை பிடிக்க சிறப்பாக பணியாற்றிய அனைத்து காவலர்களையும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பாராட்டியுள்ளார்.
Tags:    

Similar News