தொழில் முனைவோருக்கு 3 மாதம் திறன் பயிற்சி
தொழில் முனைவோருக்கு 3 மாதம் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) சார்பில், தொழில் முனைவோருக்கான 3 மாத கால திறன் மேம்பாட்டு இலவசப் பயிற்சி தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இதில், தலையாட்டி பொம்மைகள் தயாரித்தல், நெட்டி தயாரித்தல்,தஞ்சாவூர் ஓவியம் வரைதல் ஆகிய 3 விதமான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
மேலும் தர மேலாண்மை மற்றும் பேக்கேஜிங், ஏற்றுமதி, இறக்குமதி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும். திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுவதோடு, அந்தந்த துறையில் களஆய்வு மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் கலந்து கொள்ளலாம்.
குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சியின் போது மாதம் ரூ.12 ஆயிரத்து 500 உதவித் தொகையும், மதிய உணவு, பயிற்சி கையேடு வழங்கப்படும். பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பயிற்சி நடைபெறாது. பயிற்சி முடிந்த பின் தொழில் தொடங்க ஆலோசனைகளும், பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களுக்கு 9944035659 என்றசெல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல் சிப்போ அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.