அதிக பாரம் ஏற்றி வந்த 3 டாரஸ் லாரிகள் பறிமுதல்
நாகர்கோவில் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனிமவள டாரஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அளவில் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இருந்து ஏற்றி செல்லும் இந்த டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அதிக பாரம் ஏற்றுச்செல்லும் டாரஸ் லாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பேரில் குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் அதிக பாரம் ஏற்றியதாக நேற்று மூன்று டாரஸ் லாரிகளை ஈத்தாமொழி ரோடு சந்திப்பு பகுதியில் கோட்டாறு போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி உள்ளனர். இந்த டாரஸ் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ஏற்றப்பட்டுள்ள ஒவ்வொரு டன் எடைக்கும் 10 ரூ ஆயிரம் வீதம் மூன்று லாரிகளுக்கும் மொத்தம் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.