ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டம் வழங்கல்
திருச்சிக்கு மட்டும் இரண்டரை ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை வழங்கியிருப்பதாக அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
Update: 2024-04-09 01:30 GMT
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், திருச்சி கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு அமைச்சா் கே.என். நேரு பேசியது: திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டே முக்கால் ஆண்டுகளில் புதிய பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம், காய்கனி வளாகம், 3 இடங்களில் உயா்மட்ட பாலம் என ரூ. 3 ஆயிரம் கோடியில் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்ளுக்கு மத்திய அரசு எந்த நிதியும் தரவில்லை. கடும் நிதிநெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை வழங்கி தமிழக மக்களை பாதுகாத்து வருகிறது திமுக அரசு. இந்த சூழலில், இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தால் தமிழக வளா்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருக்கும். எனவே, திருச்சியில் மதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், பெண்களுக்கான ஆட்சியாக திராவிட மாடல் அரசை நடத்தி வரும் தமிழக முதல்வரின் கரத்தை மேலும் வலுப்படுத்த, நமக்கான அரசு மத்தியில் அமைய வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா். நிகழ்வில், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், மாநகா் மாவட்ட செயலா் மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் வண்ணை அரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.