31 மாடுகள் பறிமுதல்: உரிமைகளுக்கு அபராதம் விதிப்பு
பேராவூரணியில் கடைவீதி, பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என பொது இடங்களில் பராமரிப்பின்றி சுற்றித்திரிந்த மாடுகள் மற்றும் கன்றுகளை பேராவூரணி பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் மற்றும் தஞ்சை மண்டல பேரூராட்சிகளில் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் அறிவுறுத்தலின்படி, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் பா. பழனிவேல் உத்தரவின்படி, பேராவூரணி கடைவீதி, ரயில் நிலையம், பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆவணம் சாலை, முதன்மைச் சாலை, அரசு மருத்துவமனை என பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் விதமாகவும், பராமரிப்பின்றி சாலையில் சுற்றித்திரிந்த 22 மாடுகள், 9 கன்றுகள் என மொத்தம் 31 எண்ணிக்கையிலான கால்நடைகளை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வியாழக்கிழமை இரவு பிடித்து, பேரூராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அடைத்தனர்.
பின்னர், சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மாடு, கன்றுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் பா. பழனிவேல் கூறுகையில்," மாடு கன்றுகளை பொது இடத்தில் பராமரிப்பின்றி விடக்கூடாது. இந்த நடவடிக்கை மீண்டும் தொடரும்.
மாடுகளை பொது இடத்தில் விடக்கூடாது என, மூன்று முறை விளம்பர வாகனத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. தற்போது பிடிபட்ட மாடுகளுக்கு, முதல் முறை என்பதால் தலா ரூபாய் 500 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாடுகள் பிடிபட்டால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் பிடிபட்டால் அரசு விதிமுறைப்படி பொது ஏலத்தில் விடப்படும்.
எனவே மாடுகள், கன்றுகள் வளர்ப்போர் தங்கள் பொறுப்பில் வளர்க்க வேண்டும். பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை விடக்கூடாது" என்றார்.