பழங்காலத்தில் இருந்தே சிலம்பம் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் கலை அழிந்து வரும் நிலையில், தற்போது பலர் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிகேசி சிலம்ப கலை விளையாட்டு அறக்கட்டளை சார்பில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரத்தில் உள்ள, அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிலம்ப சாதனை நிகழ்ச்சியினை, கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், 5 வயது முதல் 16 வயது வரை உள்ள 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, 99 நிமிடங்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றினர். மாணவர்கள் பலரும் பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி, தங்களது திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில், சிலம்ப ஆசான் பூவேந்திரன், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி துணை முதல்வர் ஹசன், பேரூர் செயலாளர்கள் மரிய சார்லஸ், ஸ்டாலின், கந்தையன், கவுன்சிலர் வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .