3,982 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- பெறுவதற்கான வங்கி அட்டைகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ”தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்   உயர்கல்வி பயிலும் 3,982 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- பெறுவதற்கான வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

Update: 2024-08-09 15:06 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில்  தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் “தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்” கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- பெறுவதற்கான வங்கி அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மாங்குடி ,தமிழரசி  ஆகியோர் முன்னிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்கில் மாணவர்களுக்கு வழங்கினார். பின்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வி மற்றும்  உயர் கல்வித்துறையில் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், மாணாக்கர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, முன்னதாக, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ”புதுமைப் பெண்” திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு, அத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதுள்ளது. அதனைத்தொடர்ந்து, மாணவர்களும் பயன்பெறுகின்ற வகையில், "6ஆம்  வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு” வரை  அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும், மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகை வழங்கும், ”தமிழ்ப் புதல்வன்” எனும் புதிய திட்டத்தினையும் இன்றைய தினம்,  முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டமானாது ரூபாய் 360 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, அதன் வாயிலாக 03.28 இலட்சம் மாணவர்கள் தமிழகம் முழுவதும் பயன்பெற உள்ளனர். ”தமிழ்ப் புதல்வன்” திட்டமானது 2024–2025-ஆம் கல்வி ஆண்டு முதல், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின், மேற்படிப்பிற்கான, உயர்கல்வி உறுதி திட்டமாக விளங்குகிறது . மகளிர்க்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை போல எதிர்காலத்தில் ஆண்களுக்கும் வழங்கும் சூழ்நிலை வரலாம் என கூறினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தென்னவன் ,தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News