தருமபுரி அருகே விஷம் வைத்து 4 நாய்கள் சாகடிப்பு
தர்மபுரி அருகே விஷம் வைத்து 4 வளர்ப்பு நாய்கள் சாகடிக்கப்பட்டது குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
காவல் நிலையம்
தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ இவர் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில், 10க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் 10க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று காலை, இளங்கோ வளர்த்து வரும் 4 நாய்கள் மற்றும் ஒரு கொக்கு, வாயில் ரத்தம் வழிய அவரது தோட்டத்தில் இறந்து கிடந்தன.
மேலும் இரண்டு நாய்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளங்கோ,தனது வளர்ப்பு நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், தர்மபுரி விலங்குகள் நல செயற்பாட்டாளர் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ராஜலிங்கம், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். புகாரின் பேரில், தர்மபுரி நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.