எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்த முயன்ற 4 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகர்கோவிலில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்த முயன்ற 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு கடந்த 7-ம் தேதி விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தது. இங்கு பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட தயாரான போது ரயிலின் முன் பதிவு பெட்டியில் ஒரு பேக் கேட்பாரின்றி கிடந்தது.
இதனை கவனித்த டிக்கெட் பரிசோதகர் அந்த பேக்கை எடுத்து பார்த்தார். அதில் சிறு சிறு பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். சோதனையில் அந்த பேக்கில் சிறு சிறு பொட்டலங்களாக மொத்தம் நான்கு கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா பொட்டலங்களை ரயிலில் கடத்தி வந்தது யார்? இது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
இதனை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை குமரி மாவட்டத்தில் உள்ள போதை பொருட்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.