400க்கும் மேற்பட்ட காவடிகளுடன் பழனி பாத யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வரவேற்பு
குமாரபாளையம் அருகே 400க்கும் மேற்பட்ட காவடிகளுடன் பழனி பாத யாத்திரை சென்ற முருக பக்தர்களுக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.;
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியிலிருந்து முருக பக்தர்கள் காவடியுடன் 400க்கும் மேற்பட்டவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் வழியாக வந்தனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் இப்பகுதியை முருகன் அன்னதானக்குழுவினர் மேள தாளங்களுடன் வரவேற்பு வழங்குவது வழக்கம். நேற்று 7வது ஆண்டாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 400 காவடிகளும் ஒரே இடத்தில் வைத்து பூஜை செய்யும் விதமாக, பெரிய பந்தல் போடப்பட்டு, காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் ஒரே இடத்தில் மேள தாளத்திற்கு ஏற்ப காவடி ஆட, தரை தளம் முழுவதும் மலர்களால் பரப்பப்பட்டு இருந்தது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் வசம் அப்பகுதி பொதுமக்கள் வரிசையாக நின்று விபூதி பிரசாதம் வாங்கினர். இந்த விழாவை காண சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.