எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்பாக மதுரையில் 4,458 பேருக்கு தொடர் சிகிச்சை
மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள ஏஆர்டி மையத்தில் 4,458 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று டீன் ரத்தினவேல் தெரிவித்தார்.
Update: 2023-12-19 03:47 GMT
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஏஆர்டி மையம் மற்றும் பொது மருத்துவத் துறை இணைந்து, எய்ட்ஸ் சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஏஆர்டி மைய மருத்துவர் குமுதவள்ளி வரவேற்றார். மருத்துவமனை டீன் ரத்தின வேல் தலைமை வகித்து பேசியதாவது: 2004-ம் ஆண்டு முதல் மருத்துவ மனையின் ஒருங்கிணைக்கப்பட்ட ஏஆர்டி மையத்தில் இதுவரை 21,845 எச்ஐவி தொற்று உள்ள நபர்கள் பதிவு செய்யப்பட்டுள் ளனர். இவர்களில் 4,458 பேர் மாதந்தோறும் ஏஆர்டி சிகிச்சை எடுத்து வருகின்றனர். மருத்துவர்களின் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பால் 4,458 பேரில் 3,992 பேருக்கு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது 50 குழந்தைகள் ஏ.ஆர்.டி மையத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். கடந்த 3 ஆண்டு காலத்தில் எச்.ஐ.வி தொற்றால் ஒரு நோயாளி கூட உயிரிழக்கவில்லை. எச்ஐவி தொற்றுடன் காச நோய் தொற்று மற்றும் அதன் பாதிப்புகள், புற்று நோய் போன்ற பிற நோய் பாதிப்புகளால் மட்டுமே உயிரிழப்பு நடந்துள்ளது. என்று பேசினார். , ஏஆர்டி மைய மருத்துவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.