முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: ஹிதாயத்துல் லாஹ்
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக ஜமாத் பைத்துல் மால்கள் ஒருங்கிணைப்பாளர் ஹிதாயத்துல் லாஹ் கோரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கல்வி மற்றும் வட்டி இல்லாத கடன் மகளிர் உதவும் சங்கம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் தெற்கு புது தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் ஜனாப் ஷாஜகான் ஜனாப் பிதர் பிஸ்மி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், தமிழக ஜமாத் பைத்துல் மால்கள் ஒருங்கிணைப்பாளர் ஹிதாயத்துல் லாஹ் கலந்துகொண்டு விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "இந்தியாவில் அனைத்து சமுதாயமும் முன்னேறினால் தான் இந்தியா முன்னேறும். அப்பொழுதுதான் மகாத்மா காந்தி கனவு நிறைவேறும். சமுதாயத்திலே கல்வி பொருளாதாரத்தில் சமுதாயத்திலே கல்வி பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற அடிப்படையிலே எல்லா சமூகங்களுக்கும் கொடுக்கக்கூடிய வட்டி இல்லாமல் கடன் ஒவ்வொரு பள்ளிவாசல்களும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கக் கூடிய அமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ்நாட்டிலே 2500 ஊர்களிலே இந்த அமைப்பு இருக்கின்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு தருவதாக உறுதி அளித்து இருந்தார்கள். அதன்பிறகு அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை.
இப்பொழுது இருக்கின்ற இப்பொழுது இருக்கின்ற தமிழக அரசு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கமுன் வர வேண்டும் என்றார். பேட்டியின் போது, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், ஜனாப் இப்ராஹிம் உட்பட பலர் உடனிருந்தனர்.