ஆரணி பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
ஆரணி பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து லேப்டாப், 4 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.
ஆரணி பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப், 4 செல்போன் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரியபாளையம் அருகே ஆரணி பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக நேற்று மாலை ஆரணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டுக்குள் சந்தேக நிலையில் 6 பேர் அமர்ந்து செல்போனில் நம்பர் எழுதிக் கொண்டிருந்ததை பார்த்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஆரணி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (52), நாகராஜ் (60), முரளி (60), கோடீஸ்வரன் (60), சர்யையா (63), ராமகிருஷ்ணன் (37) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்றிரவு காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காட்டன் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ஒரு லேப்டாப், 4 செல்போன்கள் மற்றும் 5400 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, பிடிபட்ட 6 பேரிடமும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் யார், யார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.