
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மணியன் குழியில், பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படுகின்ற ரேஷன் கடையில் 700 க்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. ரேஷன் கடை கடந்த 15 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் செயல்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து உணவுப் பொருள்கள் சேதம் ஆகிவிடும். எனவே புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து பேச்சிப்பாறை ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ரூ.12 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு சுமார் 7 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரையிலும் கடை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அடிக்கடி கோடை மழை பெய்து வருகிறது. அடுத்ததாக பருவமழை காலம் தொடங்கும். எனவே காலம் தாழ்த்தாமல் புதிதாக அமைக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மேற்கு மாவட்ட அதிமுக எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சக்கீர் உசேன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.