கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (41 வயது). இவர் தனது வீட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். அதில் கருங்கல் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியும், அவரது சகோதரரும் அடங்குவர். சம்பவத்தன்று டியூசன் சமயத்தில் 7-ம் வகுப்பு மாணவியை மட்டும் தனி அறைக்கு ஆசிரியர் மகேஷ் அழைத்துச் சென்றார். பின்னர் திடீரென மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவி, பதற்றத்துடன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சகோதரர் அந்த அறைக்கு ஓடிச் சென்றார். தங்கையிடம் ஆசிரியர் அத்துமீறிய செயலை அறிந்த சகோதரர், அவரிடம் வாக்குவாதம் செய்தார். பிறகு தங்கையை அங்கிருந்து மீட்டு உடனடியாக வீட்டுக்கு கிளம்பினார். டியூசனில் நடந்த மோசமான சம்பவத்தை அவர்கள் தங்களுடைய தாயாரிடம் தெரித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் இதுபற்றி குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரைபோலீசார் கைது செய்தனர். கைதான மகேசுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.