கடத்தலுக்காக பதுக்கப்பட்ட 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சென்னையில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை காவல் துறையினர் இரண்டு பெண்களை கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசால் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய குடிமைப் பொருட்களை சிலர் கடத்தி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை காவல் துறைக்கு தகவல் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து பெயரில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை ஐஜி ஜோஷீ நிர்மல் குமார் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசால் வழங்கக்கூடிய உணவுப் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கடத்துபவர்களை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறையினரால் தீவிர கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வகையில் சென்னையை அடுத்த கருக்கு மீனம்பேடு மேற்கு சர்வீஸ் சாலை அருகே வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் ரேஷன் அரிசியை தமிழ்நாடு குடிமை பொருள் வளங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய அரிசியை ஆந்திரா மாநிலத்தில் முறுக்கு தயாரிக்கக்கூடிய நிறுவனங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்ய இருந்த 27 வயதுடைய ஷகிலா மற்றும் 47 வயதுடைய அமுல் ஆகிய இரண்டு பெண்களை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள ராஜேஷ் (எ) ராஜசேகரை தேடும் பணியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.